சென்னை: தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்த கருத்துகளை காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் 100 இடங்களில் பேசினால் காங்கிரஸூக்கு 1 கோடி வாக்குகள் கிடைத்துவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் ப.சிதம்பரம், உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கருத்துகளை கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் பேசிய விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன், கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். உயர்கல்வி ஆராய்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.
பின்னர் பல்வேறு துறையினர் தெரிவித்த கருத்துகளின் விவரம்:
கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும். கல்வி தனியாரிடம் சிக்கி வியாபாரமாகக் கூடாது. கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ரயில் பாஸ் வழங்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும். எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படாது என அறிவிக்க வேண்டும்.
புதிய வருமான வரி திட்டத்தில் ஆயுள் காப்பீட்டு தவணையையும் சேர்க்க வேண்டும். காப்பீட்டு தவணைக்கு ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். 100 வேலை உறுதி திட்டத்தை ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பளிக்கும் திட்டமாக மாற்றி, வேளாண் பணிகளுக்கு ஆட்களை அனுப்ப வேண்டும். தனிப்பட்ட விவசாயிகளின் பயிர் பாதிப்புக்கும் காப்பீடு கிடைக்க வழி செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். நடிகர் சிவாஜிகணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
தொடர்ந்து, கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: இங்கு பேசியவர்கள் கூறிய கருத்துகளை, கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் 100 இடங்களில் பேசினால் போதும். காங்கிரஸூக்கு 1 கோடி வாக்குகள் கிடைத்துவிடும். ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் தேர்தலில் பேசினால் காங்கிரஸூக்கு வெற்றி கிடைக்கும்” என்றார்.
கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மாநில துணை தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ அசன் மவுலானா, மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.