சென்னை: பழநி, திருச்செந்தூர் கோயில் உள்பட முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச விழா இன்று கோலாகலமாக நடந்தது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். வடலூரிலும் லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு தைப்பூச விழாவையொட்டி அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி (எ) பழனி, சுவாமிமலை,திருத்தணி, பழமுதிர்சோலை உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் அதிகாலையே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா ஜன.19ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்றிரவு 7.30 மணிக்கு நடந்தது. சிம்ம லக்னத்தில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
தைப்பூச திருவிழாவையொட்டி பழநி நகரில் நேற்று காலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கினர். நகர் முழுவதும் பச்சை, காவி உடை உடுத்திய பக்தர்களின் தலைகளே தென்பட்டன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், மற்றும் குமரி உள்பட தமிழகம் முழுவதிலும் விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகர் பக்தி பாடல்களை பாடி, ஆடியும் வந்தனர். இவர்கள் அனைவருமே முதல் நாளான நேற்று இரவு முதலே திருக்கோயில் வளாகத்தில் தங்கி, இன்று அதிகாலை நடைதிறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் திருக்கோயில் கடலில் புனித நீராடியும், அலகு குத்தி காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். சிறு குழந்தைகள் முருகர் வேடமணிந்து வந்தும் முருகனை வழிபட்டனர்.
சுவாமிமலை
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில், பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும். தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும், சுவாமிநாதன் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் இந்தாண்டு தைப்பூச விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தைப்பூச நாளான இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று, காவிரியாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலில் அதிகாலையே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல் திருச்சி வயலூர் முருகன் கோயிலில் அதிகாலையே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற அறுபடை வீடுகள் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச பெருவிழா கோலாகலமாக நடந்தது.