சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி சென்னை வந்தபோது, அவரை வரவேற்க பாஜகவினர் ஆட்களை அழைத்து வந்ததில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், அதே பகுதியை சேர்ந்த தேவி என்பவர் நேற்று புகார் அளித்தார்.
அதில், ‘‘என் தங்கை ஆண்டாள் பாஜகவில் நிர்வாகியாக உள்ளார். பிரதமர் சென்னை வந்த போது கோட்டூர்புரம், சித்ரா நகரிலிருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக என் தங்கைக்கும், நிவேதா என்பவருக்கும் பிரச்சினை இருந்தது.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி இரவு நான் என் தங்கை வீட்டில் இருந்த போது பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மேலும் 3 பேர் அங்கு வந்து, ‘பணம் வாங்கி வந்து விட்டாய். அதில், எங்களுக்கு பங்குகொடு’ என்று கேட்டு அடித்தனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, ஸ்ரீதர் உட்பட மேலும் சிலர் மீது வழக்கு பதியப்பட்டது. ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.