சென்னை: நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள அவரது பனையூர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சமீபகாலமாக நடிகர் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 180க்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் விஜய் சுமார் ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக பேசியதாகவும், அப்போது மக்கள் பிரச்சினைகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரிடையாக ஈடுபடுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.