சென்னை: தமிழகம் முழுவதும் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கும் புதிய திட்டங்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தில் நிதி ஒதுக்கப்படும். சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் பொறியாளர்களுக்கு புதிய வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பொறியாளர்களுக்கு பழைய வாகனங்களை மாற்றி, புதிய வாகனங்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, 10 வாகனங்கள் தற்போது வழங்கப்படுகிறது. 20 வாகனங்கள் விரைவில் வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கியது முதல் ஸ்டாலின் முதல்வராகும் வரை மொத்தம் 4.20 கோடி மக்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், மேலும் 3 கோடி பேருக்கு குடிநீர் அளிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். அங்கு சோதனை அடிப்படையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
கோவையில் 110 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. மதுரையில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும். திருப்பூரில் 120 மில்லியன் லிட்டர் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் குடிநீர் திட்டம், ஒகேனக்கலில் ரூ.10 ஆயிரம் கோடியில் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. 117 இடங்களில் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.
முதல்வர் வெளிநாட்டு பயணம் முடித்து திரும்பியதும், கோவை, திருப்பூர், மதுரை குடிநீர் திட்டங்கள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய 4 பெரிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும். லட்சக்கணக்கான மக்களுக்கு இதன்மூலம் குடிநீர் கிடைக்கும்.
வைகையை நீராதாரமாக கொண்டு திண்டுக்கல்லுக்கு குடிநீர் திட்டம், பெரம்பலூருக்கு தனியாக கூட்டு குடிநீர் திட்டம், நாமக்கல் பகுதியில் விடுபட்ட இடங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம், புதுக்கோட்டைக்கு ரூ.1,500 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சட்டப்பேரவை கூட்டத்தில் நிதி ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். உடனடியாக தேவைப்படும் திட்டத்தை முதலில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது: கனமழை பெய்து வெள்ளம் வந்துள்ள நிலையில், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. மற்ற பகுதிகளிலும் போதுமான தண்ணீர் உள்ளது. காவிரி படுகையில் மட்டும்தான் இந்த ஆண்டு தண்ணீர் குறைவாக இருந்தது. வடகிழக்கு பருவமழையின்போது நிலத்தடி நீர் பெருகிவிட்டதால், அங்கும் சமாளித்துவிடலாம்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. முதல்வர் அனுமதியளித்துள்ள நிலையில் பணியாளர்கள் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சாலை சீரமைப்பு: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படும். பாதாள சாக்கடை பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.