சென்னை: தமிழ்நாடு அரசில் இன்னும் சில நாட்களில் பல்வேறு மாறுதல்களை பார்க்க முடியும் என்று தெரிகிறது.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியாகும் நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான மாற்றங்கள் ஒரு புறம் என்றால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி 10 நாட்களுக்கு வெளிநாடு பயணம் செல்லவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
அந்த சமயத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான, உதயநிதி ஸ்டாலினிடம் (Udhayanidhi Stalin), முதலமைச்சர் பொறுப்பை கொடுத்துச் செல்லலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, ‘பொறுப்பு முதலமைச்சர்’ என்ற அளவில் அந்த மாற்றம் இருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
துணை முதலமைச்சர் பதவி
திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக கட்சியிலும், ஆட்சியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க இருப்பதாக பரவலாக பேசப்பட்ட நிலையில், அப்படி எதுவும் இல்லை என்று மறுப்பு வெளியிடப்பட்டது. அதற்குக் காரணம், பொறுப்பு முதலமைச்சர் பதவி உதயநிதிக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில்,தமிழ்நாட்டில்இப்படியொரு அறிவிப்பு வெளியானால், அது அடுத்த முதலமைச்சர் உதயநிதி என்று சொல்வதற்கான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, துணை முதலமைச்சர் என்ற பதவி உயர்வு உதயநிதிக்கு வழங்கப்படும் என்ற கணிப்புகள் பொய்யானதற்கு காரணமே, பொறுப்பு முதலமைச்சராக பொறுப்பு கொடுக்கலாம் என்ற யோசனையே காரணமாக இருக்கும் என்றும் யூகிக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் வெளிநாட்டு பயணம்
பொதுத்தேர்தல்கள் நெருங்கி வரவிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவது போலவே திமுகவும் களத்தில் மும்முரமாக செயல்பட்டுவருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் சில நாட்களில், அதாவது ஜனவரி 28 ஆம் தேதி அமெரிக்கா, லண்டன், பிரானஸ் ஆகிய நாடுகளுக்கு செல்வது இந்த யூகங்களை உறுதி செய்கிறது.
வெளிநாட்டு முதலீடுகள்
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் பயணம் இருக்கும் என்று கூறுவதை உறுதி செய்யும் வகையில், மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் முதலமைச்சருடன் செல்கிறார்.
சோதனையா? பரிட்சையா?
முதலமைச்சர் வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழகம் திரும்பும் வரையில், முதலமைச்சர் பொறுப்பை தற்காலிகமாக உதயநிதி ஸ்டாலினிடம் அளிப்பது ஒரு சோதனை முயற்சியாக இருக்கலாம்.
இதற்கு முன்னதாக மு.க ஸ்டாலின் நீண்ட காலம் பொறுமையாக காத்திருந்து, துணை முதலமைச்சராகி, பிறகு முதலமைச்சரான சூழ்நிலை, உதயநிதி ஸ்டாலினுக்கும் வர வேண்டாம் என்பதற்காக, துணை முதலமைச்சர் என்ற பதவி தொடர்பான யோசனை கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பொறுப்பு முதலமைச்சர் பின்னணி
பொதுவாக, முதலமைச்சர் வெளிநாடு செல்லும் போது பொறுப்பு முதலமைச்சரை நியமிப்பது வழக்கமான ஒன்று தான். இருந்தபோதிலும், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எந்த நாட்டிற்கு சென்றாலும், முதலமைச்சர் தொலை தொடர்பில் இணைந்திருப்பதால் அண்மைக் காலங்களில் பொறுப்பு முதலமைச்சர் என்பது வழக்கத்தில் இல்லை.