Breaking News
Home / செய்திகள் / ரூ.1003 கோடி முதலீடு, 840 பேருக்கு வேலைவாய்ப்பு | தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரூ.1003 கோடி முதலீடு, 840 பேருக்கு வேலைவாய்ப்பு | தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜன.,23) தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து வெளியான அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (23.1.2024) தலைமைச் செயலகத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (Corning International Corporation) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் (Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் (Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும் (capital intensive high-tech Industries), பெருமளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் (Employment intensive Industries) ஆகிய இரு தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் இம்மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட ‘கார்னிங் கொரில்லா® கிளாஸ்’ உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனம், இந்தியாவில் கைபேசிக் கூறுகள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி (Front cover glass) தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் கைபேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக Precision glass processing தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் இதற்கான இத்தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக, இன்று தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *