சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு வாக்காளர்கள் எண்ணிக்கையைவிட 7.61 லட்சம் பேர் அதிகமாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு கூறியதாவது: தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில், 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 2023 அக்.27-ம்தேதி தொடங்கியது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அக்.27 முதல், டிச.9-ம் தேதி வரை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, பெயர் சேர்க்க 13 லட்சத்து 88,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 13 லட்சத்து 61,888 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன. பெயர் நீக்கம் செய்ய 6 லட்சத்து 43,307விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் இடமாறுதலுக்காக 3 லட்சத்து 71,537 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உயிரிழந்தவர்கள்1 லட்சத்து 33,477 மற்றும் இரட்டைப் பதிவு 97,723 என 6 லட்சத்து 2,737 பேரது பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும் பெயர், முகவரி, புகைப்படம் திருத்தம் தொடர்பான படிவம்-8பெறப்பட்டு 3 லட்சத்து 23,997 பேரது பதிவுகளில் திருத்தம் செய்யப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3 கோடியே 3 லட்சத்து 96,330 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 14 லட்சத்து 85,724 பெண் வாக்காளர்கள், 8,294 மூன்றாம்பாலினத்தவர் உள்ளனர். இதில், ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 89,394 பேர் அதிகம்.
வாக்காளர் பட்டியலின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமாக 6 லட்சத்து 60,419 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த இடத்தில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 4 லட்சத்து 62,612 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்டதொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் 1 லட்சத்து 72,410 வாக்காளர்களும், அடுத்ததாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 72,624 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர் இறுதி பட்டியல்படி 3,480 வெளிநாடு வாழ்வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 32,805 பேர் மாற்றுத் திறனாளி வாக்காளர்களாக குறிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திருத்த பணிகளின்போது. 18-19வயது உள்ளவர்கள் 2 லட்சத்து 74,035 ஆண்கள், 2 லட்சத்து 52,096 பெண்கள், 74 பேர்மூன்றாம் பாலினத்தவர் என 5 லட்சத்து 26,205 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பெயர் இல்லாத பட்சத்தில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்வதற்கும் ஜன.22 முதல் தொடர் மேம்படுத்தல் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்முறை வாக்காளர்கள், பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்தி பெயர் சேர்க்கலாம்.
வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம்-6 சமர்ப்பிக்கலாம். www.voters.eci.gov.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இதுவிர, ‘Voter Helpline App’ செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடர்ந்து நடைபெறும்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்பு பணி 69.38 சதவீதம் (4.29 கோடி) முடிந்துள்ளது. தமிழகத்தில் 2019-ம் ஆண்டு நிலவரப்படி 68,033 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் வாக்குச்சாவடிகளும் 68,144 ஆக உயர்ந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வயதுவாரியாக வாக்காளர் விவரம்