Breaking News
Home / செய்திகள் / பிரதமர் மோடி வருகையால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – கேலோ இந்தியா போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி வருகையால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – கேலோ இந்தியா போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் இன்று மாலை கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இதன் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக, பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மாலை 4 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு 4.50 மணிக்கு வருகிறார். அங்கிருந்து நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகிறார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தொடக்க விழாவில் தமிழக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கர்னாடக இசைக் கலைஞர்கள் டி.வி.கோபாலகிருஷ்ணன், சுதா ரகுநாதன், சந்தானகோபாலன், நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரும், மீனாட்சி இளையராஜா, வி.எம். மகாலிங்கம், முத்துசிற்பி ஆகியோரும், 100 பரதநாட்டியக் கலைஞர்களும் இணைந்து, தமிழ்நாட்டின் செம்மொழி மற்றும் நாட்டுப்புற இசையின் கலவையை வழங்குகின்றனர்.

உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழின் பயணம் மற்றும் பரிணாம வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுகளின் தோற்றம் குறித்தும் விளக்கப்படுகிறது. நம்மை பழங்காலத்துக்கு அழைத்துச் செல்வது போல இது சித்தரிக்கப்படுகிறது.

பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் யோகாசன உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

கடந்த 10 நாட்களாக 5 வாகனங்களில் தமிழகம் முழுவதும் பயணித்த கேலோ இந்தியா விளையாட்டு ஜோதியை, பலமுறை காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் ஏ.சரத் கமல் மற்றும் தடகள வீராங்கனை வி.சுபா ஆகியோர் பிரதமரிடம் ஒப்படைக்கின்றனர்.

கேலோ இந்தியா தொடக்க விழாவை முடித்துக் கொண்டு இரவு7.45 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் பிரதமர், இரவு அங்கு தங்குகிறார்.

நாளை (ஜன.20) காலை திருச்சி சென்று, ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், ராமேசுவரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். நாளை இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.

மறுநாள் (ஜன.21) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில்புனிதநீராடும் பிரதமர் மோடி,பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற பிறகு, டெல்லி திரும்புகிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: பிரதமர் வருகையை முன்னிட்டுசென்னையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஆர்.சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு)மேற்பார்வையில் சட்டம் – ஒழுங்கு,குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம், விமான நிலையம், ஆளுநர் மாளிகை உட்பட பிரதமர் செல்லும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய சாலைகள், சந்திப்புகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் பறக்க தடை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல்எல்லையில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராஃப்ட், பாராகிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேண்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் செல்லும் பாதைகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன் கேமரா உள்ளிட்ட பறக்கும் பொருட்கள் பறப்பதற்கு இன்றும், நாளையும் (ஜன.19, 20) தடை விதித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப், ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேலோ இந்தியா தொடக்க விழா நடைபெறும் பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் பிரதமர் காரில் செல்ல உள்ள ஐஎன்எஸ் அடையாறு – நேரு உள்விளையாட்டு அரங்கம் – ஆளுநர்மாளிகை இடையிலான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் மாநகர காவல்ஆணையர் என்.காமினி தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினரும் (எஸ்பிஜி) பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *