சென்னை: தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைகளை விரிவுபடுத்த பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பெரம்பலூரில் ரூ.2,500 கோடியில் குரூக்ஸ் காலணி தொழிற்சாலையை பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் தொடங்கி உள்ளது. 2022 நவம்பரில் காலணி ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த நவம்பரில் ஆலையை திறந்து வைத்தார். பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் 2-வது கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. 4 சர்வதேச காலணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஆலைகள் அமைக்கப்படும் என பீனிக்ஸ் கோத்தாரி தலைவர் ரஃபீக் தெரிவித்துள்ளார்.
புதிய தொழிற்சாலைகள் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்க முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.