சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக கல்வித்துறைகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள், வட்டாரக் கல்வி அதிகாரிகள் (பிஇஓ) உட்பட பணிகளில் ஏற்படும் காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதனுடன் ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) டிஆர்பி-யால் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே ஓராண்டில் என்னென்ன தேர்வு நடத்தப்படும், அதற்குரிய அறிவிப்புகள் எப்போது வெளியாகும் போன்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஆர்பி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை தேர்வு வாரியம் தனது இணையதளத்தில்(www.trb.tn.gov.in) நேற்று வெளியிட்டது.
அதன் விவரம் வருமாறு: 1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை இந்த மாதம் வெளியிட்டு, ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் உள்ள 4,000 காலி இடங்களுக்கு பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூனில் தேர்வு நடத்தப்படும்.
அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும். அதற்கான தேர்வுகள் ஜூலையில் நடைபெற உள்ளது. 200 முதுநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஆகஸ்ட் மாதமும் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு செப்டம்பரிலும் நடத்தப்படும்.
இதுதவிர மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (எஸ்சிஇஆர்டி) 139 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் மாதத்திலும், அரசு சட்ட கல்லூரியில் உள்ள 56 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பரில் அறிவிப்பாணை வெளியிட்டு 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் தேர்வு நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்தாண்டு டிஆர்பி வெளியிட்ட தேர்வுக்கால அட்டவணையில் மொத்தம் 9 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதில் 2 தேர்வு மட்டுமே டிஆர்பியால் நடத்தப்பட்டது. மேலும், கடந்தாண்டு வெளியான அட்டவணையில் இடைநிலை ஆசிரியர் பணியில் 6,553 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
ஆனால், 2024 அட்டவணையில் அந்த எண்ணிக்கை 1,766 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை உதவியாளர் (67), சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் (71) பணியிடங்களிலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சென்ற ஆண்டு குறிப்பிடப்பட்டிருந்த அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் (97), அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் (493) பணிகளுக்கான அறிவிப்புகள் இந்தாண்டு அட்டவணையில் இடம்பெறவில்லை.
புதிதாக எஸ்சிஇஆர்டி துறையில் 139 விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளது. டிஆர்பியின் இத்தகைய நடவடிக்கைகள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.