Breaking News
Home / செய்திகள் / ஐபிஎல் தொடருக்குத் தயாராக இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, கோலி தேர்வா?

ஐபிஎல் தொடருக்குத் தயாராக இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, கோலி தேர்வா?

ஐபிஎல் தொடருக்குத் தயாராக இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, கோலி தேர்வா?

கடந்த நவம்பர் 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி20 அரையிறுதியில் ஆடிய பிறகு டி20 போட்டிகளில் ஆடாத விராட் கோலியையும் ரோகித் சர்மாவையும் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்ததன் பேரில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

டி20 அணியில் இவர்கள் பணி முடிந்துவிட்டது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், மீண்டும் டி20-யிலும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் அவர்கள் வழியை அடைத்துக் கொண்டிருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் காயத்தினால் இந்தத் தொடரில் ஆட முடியாததால் கோலி, ரோகித் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும், ஐபிஎல் அணிகளின் நிர்வாகம் இந்திய டி20 அணித் தேர்வில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனரோ என்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை. மேலும், ருதுராஜ் கெய்க்வாடும் விரல் காயத்தினால் ஆட முடியவில்லை என்பதால் இந்தத் தேர்வு நியாயப்படுத்தப்படுகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா ரன்கள் வராமல் திணறினார். ஆகவே, இந்த முறை சர்வதேச டி20-யில் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்ற மறைமுக அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம். ரோகித்தைத் தேர்வு செய்து விட்டு கோலியை தேர்வு செய்யாமல்விட்டால் அனாவசிய சர்ச்சைகளுக்கு இடமாகும். ஆகவே, இருவரது தேர்வும் பல குழப்பங்களையும் கேள்விகளையும் எழுப்புவதாக உள்ளது.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இவர்கள் இருவரது தேர்வையும் ஆதரித்துப் பேசியுள்ளார். அதாவது பிரச்சினை என்னவெனில், ரோகித்தும் கோலியும் தங்களைத் தாங்களே தேர்வு செய்து கொள்கின்றனர். இவர்கள் நினைத்தால் விடுப்பு கேட்பது, வருகிறோம் என்றால் தேர்வு செய்வது என்ற ரீதியில் அணித் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டியாதான் பெரும்பாலும் வழிநடத்தினார். ஆனால், 2023 உலகக் கோப்பையில் முழங்காலில் காயமடைந்தார். சூர்யகுமார் யாதவ் அதன் பிறகு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர் ட்ரா ஆனது. இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் ஓரிரு மாதங்களுக்கு இவர்களால் ஆட முடியாது. மேலும் ஹர்திக், சூர்யா இருவருமே மும்பை இந்தியன்ஸ் ஐகான் வீரர்கள். எனவே அவர்கள் காயமடைந்து ஐபிஎல் ஆட முடியாமல் போனால் அது ஃபிரான்ச்சைஸியின் வருவாயில் குறிப்பிடத்தக்கததை இழக்க நேரிடும்.

கடந்த 4 உலகக் கோப்பைகளாக இந்திய அணியின் டாப் ஆர்டர் விரும்பத்தக்க வகையில் ஆடவில்லை. முதலில் பேட்டிங் செய்ததால் கூட இருக்கலாம். ரோகித் சர்மா ஐபிஎல் உட்பட சரியாக ஆடவில்லை, ரன்கள் வரவில்லை. மும்பை இந்தியன்ஸே ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு பேரம் பேசி வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது. ரோஹித் சர்மாவின் சர்வதேச டி20-களில் கடைசி 10 போட்டிகளில் ஸ்கோர், 17, 0, 43, 0, 4, 53, 15, 2, 15, 27.

இவரை ஒப்பிடுகையில் விராட் கோலி நன்றாகவே ஆடியிருக்கிறார். அவரது கடைசி 10 டி20 சர்வதேச ஸ்கோர்கள் 11, 63, 3, 49 நாட் அவுட், 82 நாட் அவுட், 62 நாட் அவுட், 12, 64 நாட் அவுட், 26, 50. ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை கடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 124 ஸ்பின் பந்துகளை மிடில் ஓவர்களில் சந்தித்து 110 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்த 124 பந்துகளில் கோலி 32 முறைதான் பவுண்டரி அடிதார். மாறாக, சூர்யகுமார் தான் எதிர்கொண்ட 148 பந்துகளில் 59 முறை பவுண்டரி அடிதார். கோலி 4 ஸ்பின் பந்துகளுக்கு ஒருமுறைதான் பவுண்டரி அடிக்க முயல்கிறார். இது சூர்யாவை ஒப்பிடும் போது குறைவு என்கிறது புள்ளி விவரங்கள்.

முன்பெல்லாம் அணித் தேர்வு செய்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில்தான் டீம் அறிவிக்கப்படும், கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும். இப்போதுள்ள பிசிசிஐ நிர்வாகம் செய்தியாளர்கள் சந்திப்பை முற்றிலும் ஒழித்துவிட்டது. யார் என்ன கேள்வி கேட்பது, நாம் தேர்வு செய்வதுதான் அணி என்கிற எதேச்சதிகாரப் போக்கு பிசிசிஐ-யில் நிலவுவதை பல விமர்சகர்களும் சுட்டிக்காட்டியபடியே தான் உள்ளனர். ரோகித், கோலி இருவரும் லெவனில் இருந்தால், பிராமிஸிங் வீரர்களான திலக் வர்மா அல்லது தற்போதைய டி20 பினிஷர் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பில்லாமல் போகும். ஸ்ரேயஸ் ஐயர் இடம் உறுதியானது அல்ல.

மிடில் ஓவர்களில் கோலி அறுவையாக மாறி விடுவதை ஐபிஎல் 2022-லும் பார்த்தோம். அதேபோல் இவர் டி20 உலகக் கோப்பையில் ஆடினால் இவர் விட்டதை இட்டுக்கட்ட ரிங்கு சிங் போன்றவர்கள் தங்களை அடகு வைக்க வேண்டும். அதே போல்தான் ரோகித்தும். இவரது டி20 ஃபார்ம் கேள்விக்குரியது. இவரும் தோல்வியடைந்தால் எழும் பிரஷர் மிடில் ஆர்டர், பிஷினர் மேல் விழும்.

இதற்கு ஒரே தீர்வு ரோஹித், கோலி இருவரையும் லெவனில் வைக்கக் கூடாது. யாராவது ஒருவரைத்தான் அணியில் எடுக்க வேண்டும். ரோகித்துக்கு பதில் கோலி ஆடினால் அவர் தொடக்க வீரராக இறங்க வேண்டும். அப்படி நடக்க வாய்ப்பில்லை. காரணம் ரோகித் சர்மாதான் கேப்டன், அவர் எப்படி லெவனில் இல்லாமல் இருப்பார். மேலும் இவர் கோலியை ட்ராப் செய்தால் அனாவசியமான சர்ச்சைகள் எழும். ஏற்கெனவே இவர்களால்தான் தீபக் ஹூடா போன்ற பிரமாதமான டி20 வீரர்களெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஒழிக்கப்பட்டார்கள். இனி வரும் சீசனில் புதிய இளம் பலிகடா யார் என்பதைப் பார்க்கவே நமக்கு பரிதாபமாக இருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் இந்திய அணித் தேர்வில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்துவதோடு இப்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டை ஆடுவதே ஐபிஎல் பெர்பார்மன்ஸுக்குத்தானோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *