சென்னை: தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், `தென்னை நார் கொள்கை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்த்தும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடவும் தயாரிக்கப்பட்டுள்ள “தென்னை நார் கொள்கை 2024”-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறையின் செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் மற்றும்தொழில் வணிக இயக்குநர் இல.நிர்மல்ராஜ், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன முதன்மை செயல்அலுவலர் இரா. கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிறப்பம்சங்கள்: இக்கொள்கை, தென்னை நார்தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவது, அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதி செய்வது மற்றும் தொழிற் நிறுவன சங்கங்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன்படி நடவடிக்கை மேற்கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் முதலீடு செய்த அனைத்து பங்குதாரர்களையும் பயன்பெறச் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
உலகத் தரத்திலான மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் பொருட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, தென்னைநார் துகள் மற்றும் தென்னை நார்மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான அதிநவீன ஆய்வகம் நிறுவப்படும். தென்னை நார் தொழிலில் நிலையான, சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட நடைமுறைகளை மேம்படுத்த இக்கொள்கை முன்னுரிமை அளிக்கும்.
தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்காக பிரத்யேகசிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். இம்மையங்கள் புதிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி, விவசாயம், புத்தொழில்கள், தென்னை நார் சார்ந்த தொழில்களின் போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.
உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் சந்தையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும். தென்னை நார் பொருட்களின் பங்களிப்பின் வாயிலாக சந்தை விரிவாக்கத்தை இந்தக் கொள்கை நோக்கமாக கொண்டிருக்கும். ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் புதிய தென்னை நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை விரைவாக மேம்படுத்த இக்கொள்கை வழிவகுக்கும்.
ஒற்றைச் சாளர முறை மற்றும்தொழில் முதலீட்டாளர்களுக்கான உகந்த சூழ்நிலை ஆகியவற்றின் மூலம் தென்னை நார் சார்ந்த தொழிலில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்புகளுடன் கூட்டாண்மைக்கான அடித்தளத்தை இந்த கொள்கை அமைக்கிறது.
கிராமப்புற பொருளாதார முன்னேற்றம், மகளிர் வேலைவாய்ப்பு, தென்னை விவசாயிகளுக்கான வருமானத்தை அதிகரித்தல், புதுமை, போட்டித்திறன் மற்றும் பொறுப்புடன் கூடிய நிலையான வளர்ச்சி மூலம்புதிய சகாப்தத்தை அடைய வழிகோலுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.