சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் சென்னை தியாகராயநகர் பனகல் பூங்காவில் ஜனவரி 3-வது வாரத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக “பிகாக்” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் அமைகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட மற்றும் சுரங்கப்பாதை பணிகள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி வரையிலான உயர்மட்டபாதையில் 50 சதவீதம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டு டிசம்பருக்குக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது. இந்த குறிப்பிட்ட பாதை மக்கள் பயன்பாட்டுக்காக, 2025-ம் ஆண்டு இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வழித்தடத்தில் பனகல் பூங்காவில் சுரங்கப்பாதை தோண்டும் பணி ஜனவரி 3-வது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக, “பிகாக்” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்கு பிளமிக்கோ, ஈகில், பிகாக், பெலிகான் என மொத்தம் 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்து, தற்போது ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
இதையடுத்து, ஒரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்தில் இருந்தும், இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தியாகராயநகர் பனகல்பூங்காவில் இருந்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை பணி தொடங்கி, 130 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது. தி.நகர் பனகல் பூங்காவில் சுரங்கப்பாதை பணிக்காக, “பிகாக்” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.