Breaking News
Home / செய்திகள் / வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கிய தமிழக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கிய தமிழக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு

சென்னை: “புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஏற்கெனவே பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு வழங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இதனை வரவேற்கிறது.

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள் தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகின. அனைத்தையும் இழந்து மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பேருதவியாக அமைந்தன. மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிதி ஒதுக்கும் பட்சத்தில் நிவாரண உதவிகளை, உதவித் தொகைகளை மேலும் அதிகரித்திட வாய்ப்புகள் ஏற்படும்.

தமிழக முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் மறு கட்டமைப்பு பணிகளை சீர் செய்திட ரூ. 21 ஆயிரம் கோடி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒதுக்கிட வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், இதுகாறும் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் சூழலில், கடுமையான பாதிப்புகளை கணக்கில் கொண்டு தற்போது வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடு கட்டவும், புனரமைக்கவும், பயிர் சேதங்களுக்கும், கால்நடை உயிரிழப்புகளுக்கும், சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், முனைவோர்கள், சுய உதவிக்குழுக்கள், மீனவர்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், உப்பளங்கள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளும், குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கும், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அரசே மேம்படுத்தி தருவதற்கும் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திடுக: மத்திய பாஜக அரசு தமிழகத்தின் மீது கொண்டுள்ள வஞ்சகப் போக்கை கைவிட்டு, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக அரசு கோரியுள்ள ரூ. 21 ஆயிரம் கோடி நிதியினை உடனடியாக வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 3, 2024 அன்று சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு நடைபெறும் முற்றுகைப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *