Breaking News
Home / செய்திகள் / அமோனியா கசிவு | அத்துமீறும் எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் இருப்பது யார்?- அன்புமணி சரமாரி கேள்வி

அமோனியா கசிவு | அத்துமீறும் எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் இருப்பது யார்?- அன்புமணி சரமாரி கேள்வி

சென்னை: எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்திய உர ஆலை, எந்த துணிச்சலில் பொய்யான தகவல்களை பரப்பியது? ஆலைக்கு அந்த அளவுக்கு துணிச்சல் ஏற்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்றும் அன்புமணி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னையை அடுத்த எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமான தனியார் ஆலை, அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைப் பொருட்படுத்தாமல் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. விதிகளை வளைத்து ஆலையை மீண்டும் திறக்க செய்யப்படும் முயற்சிகளை அரசு வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கிறது.

சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் கடந்த திசம்பர் 26&ஆம் நாள் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் அப்பகுதியில் உள்ள சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் உள்ளிட்ட 30&க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

கோரமண்டல் உர ஆலையிலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது தொடர்கதையாகி விட்டதால், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்காக எண்ணூர் மக்கள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். எண்ணூர் பகுதி மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு பா.ம.க முழு ஆதரவை தெரிவிக்கிறது. ஆனாலும், அவர்களுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இல்லை.

மற்றொருபுறம் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மதிக்காமல், ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் கோரமண்டல் நிறுவனத்தின் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. உர ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு, ஆலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அதன் விசாரணையை முடித்து தற்காலிக அறிக்கையையும், முழு அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்து விட்டது. அந்த அறிக்கையை மக்கள் பார்வைக்கு வெளியிடவோ, அதன் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழ்நாட்டு அரசின் சார்பில் எந்த முன்முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக, அமோனியா வாயுக்கசிவை ஏற்படுத்தி, மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய கோரமண்டல் உர ஆலை, அரசு அமைத்த வல்லுநர் குழுவை பயன்படுத்தி, தனது தவறுகளையும், குற்றங்களையும் துடைத்துக் கொள்ள முயல்கிறது. வல்லுநர் குழு தமிழக அரசிடம் தாக்கல் செய்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு ஒப்புதல் அளித்து விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. ஆலையிலிருந்து அமோனியா வாயு வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆபத்தான கட்டத்தை தாண்ட வில்லை என்றும், ஆலை நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வாயுக்கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் கோரமண்டல் நிறுவனம் கூறியுள்ளது. இவை அப்பட்டமான பொய்களாகும்.

வாயுக்கசிவு ஏற்படுத்திய ஆலையை திறக்க வல்லுநர் குழு எந்த பரிந்துரையும் வழங்கவில்லை. வல்லுநர் குழு அளித்த அறிக்கையை அரசு முதலில் ஆய்வு செய்ய வேண்டும்; அதில் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்; அது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் உர ஆலை தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும்; அதன்பிறகு தான் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்க முடியும். ஆனால், வல்லுநர் குழு நேரடியாகவே ஆலையை திறக்க அனுமதி அளித்து விட்டதாக ஆலைத் தரப்பில் செய்தி பரப்பப்படுவது மக்களை ஏமாற்றும் செயல்.

வாயுக்கசிவு ஏற்பட்ட சிறிது நேரத்தில் அப்பகுதியில் காற்றில் கலந்துள்ள அமோனியா வாயுவின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவான 400 மைக்ரோகிராம்/கனமீட்டர் என்பதை விட நான்கு மடங்குக்கும் கூடுதலாக 2090 மைக்ரோகிராம்/கனமீட்டர் என்ற அளவிலும், கடல் நீரில் 5 மில்லிகிராம்/லிட்டர் என்ற அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக 49 மில்லிகிராம்/லிட்டர் என்ற அளவுக்கு இருந்திருக்கிறது. இது மிக மோசமான பாதிப்பு ஆகும். கோரமண்டல் ஆலையின் இந்த பொய்ப்பரப்புரையை வல்லுநர் குழுவில் உள்ள சில அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மறுத்தார்களே தவிர, அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, உர ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் நிறுத்திக் கொண்டது. அரசையும், மக்களையும் ஏமாற்றும் நோக்கத்துடன் உர ஆலை தவறான செய்திகளை பரப்பி வருவதை கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை.

இவை ஒருபுறமிருக்க, மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்திய உர ஆலை, எந்த துணிச்சலில் பொய்யான தகவல்களை பரப்பியது? ஆலைக்கு அந்த அளவுக்கு துணிச்சல் ஏற்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? உர ஆலையின் செயல்பாடுகளை தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கண்டிக்காததும், தண்டிக்காததும் ஏன்? என்பன குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

கோரமண்டல் உர ஆலையில் வல்லுநர் குழு நடத்திய ஆய்வு குறித்த விவரங்களையும், அதனடிப்படையில் அக்குழு தாக்கல் செய்த அறிக்கையையும் பொதுமக்கள் பார்வைக்கு தமிழக அரசு வெளியிட வேண்டும். வல்லுநர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், போராட்டம் நடத்தி வரும் மக்களின் உணர்வுகளை மதித்து கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *