சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கடுமையான குற்றம் சுமத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முழு முதல் காரணமாக இருந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட ஐஜி சைலேஷ் குமாருக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது சட்டத்துக்கும் நீதிக்கும் இயற்கை நியதிக்கும் புறம்பானது. சைலேஷ் குமார் யாதவுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை தமிழக முதல்வர் தலையிட்டு, திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.