சென்னை: தமிழகத்தில் உயர்மட்ட ஊழல் வழக்குகள் மீதான விசாரணையை தடுக்க முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுவதாக அமலாக்கத் துறை அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும்அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இந்த வழக்குகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகளிடம் விசாரணை செய்தனர்.
மேலும், 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். இதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுசம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இந்த உத்தரவுக்கு தடை பெற்றனர். இதேபோல்,அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையும் அமலாக்கத் துறையிடம் உள்ளது.
இந்நிலையில், மதுரை துணைமண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல்அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம்,வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் தவிர்க்க, ஏற்கெனவே ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற நிலையில், மீண்டும் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்க முற்பட்டபோது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அங்கித் திவாரி தொடர்புடைய இடங்கள் எனக் கூறி அங்கித் திவாரி பணியாற்றிய மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். அங்கித் திவாரி அறையில் இருந்து சில ஆவணங்களும், அவரது வீட்டில் நடந்த சோதனையில் லேப்-டாப்உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அத்துமீறல் இருந்ததாக குற்றம்சாட்டிய மதுரை அமலாக்கத் துறையினர், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புகார் மனு அனுப்பினர்.
அதில், ‘கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி அறைக்குள் நுழைந்து, சோதனை என்ற பெயரில் அங்கு இருந்த சில ஆவணங்களை திருடிச்சென்றுள்ளனர். வழக்குக்கு சம்பந்தமில்லாத ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்ற போர்வையில் உரியஅனுமதியின்றி மதுரை துணைமண்டல அமலாக்க துறை அலுவலகத்துக்குள் நுழைந்து, தங்களது வழக்குக்கு தொடர்பில்லாத மிகவும் ரகசியமான ஆவணங்களை திருடிய 35 நபர்கள் மீது வழக்கு பதிந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் எனபுகாரில் தெரிவித்து இருந்தனர்.ஆனால், இதன்மீது எநத நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், லஞ்ச வழக்கில் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக தமிழகலஞ்ச ஒழிப்பு போலீஸார் அளித்தபுகாரின்பேரில், மதுரை தல்லா குளம் காவல் நிலைய போலீஸார் அமலாக்கத் துறையினருக்கு சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில், தமிழகத்தில் உயர்மட்ட ஊழல் வழக்குமீதான விசாரணையை தடுக்க முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுவதாக பெயர்குறிப்பிட விரும்பாத அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார்.