சென்னை: 99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில், ’99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு , நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவராலும் போற்றப்படக்கூடிய மனிதராக இருக்கிறவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு . அவருக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜிகே வாசன்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணுவுக்கு 98 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பவர். தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, தமிழ்நாடு முன்னேற அயராது பாடுபடுபவர். பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமையைப் பின்பற்றுபவர். ஐயா நல்லக்கண்ணு நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில், ‘எளிமையான வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முதுபெரும் அரசியல்வாதி அன்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நதிநீர் உரிமைகள் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கும் போராளி ஐயா நல்லகண்ணு அவர்கள் பூரண உடல்நலத்துடன் நூற்றாண்டு கடந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.