சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட இரட்டை தலைமைசெயல்பட்டு வந்தது. கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், இருதரப்பினர் இடையே நீண்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சட்டப்போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின்இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும்அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு,தேர்தல் மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்த வேண்டும். அதன்படி, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை காலை 10.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது.
பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளரான பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழுகூட்டம் என்பதால், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய இசை நடனங்கள், குதிரை படை, பேண்டு, வாத்தியம், நாசிக் டோல், மகளிரணியினரின் பூரண கும்ப மரியாதை என தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 2800 பேருக்குஅழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறுசுவை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.