சென்னை: கல்விக் கட்டணத்துக்காக ஆட் டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16 லட்சம் தவறியது. அதை 12 மணி நேரத்தில் போலீஸார் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (52). இவர், சென்னை அரும்பாக்கம் ஜெய்நகரில் வசிக்கும் தனது சகோதரர் வெங்கடேசனை பார்க்க 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். அங்கிருந்து விருகம்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் தாமோதரனை சந்திக்க நேற்று முன்தினம் சென்றார். அவரை சந்தித்த பின்னர், ஓர் ஆட்டோவில் விஸ்வநாதன் மீண்டும் தனது சகோதரர் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
அங்கு வந்த பின்னர் தான் வைத்திருந்த ரூ.15 லட்சத்து 90ஆயிரம் ரொக்கத்துடன் கூடிய பணப்பையை, ஆட்டோவின் பின்பகுதியில் வைத்ததையும், அதை எடுக்காமல் தவறவிட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார், அந்த ஆட்டோ குறித்து விசாரணையைத் தொடங் கினர்.
சிசிடிவி கேமரா பதிவு ஆய்வு: மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் ஆட்டோவை அடையாளம் கண்டு, அந்த ஆட்டோவை தேடினர். அது போரூர் கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (48) என்பவரது ஆட்டோ என தெரியவந்தது. இந்நிலையில் கோயம்பேடு பகுதியிலேயே இருந்த அந்த ஆட்டோவை மறித்து போலீஸார் சோதனையிட்டனர். அப்போது விஸ்வநாதன், அந்த ஆட்டோவின் பின்பகுதியில் வைத்த இடத்திலேயே இருந்த அப்பையை கைப்பற்றி, பணத்தை சரிபார்த்தனர். பணம் அப்படியே இருந்தது. இதையடுத்து போலீஸார் விஸ்வநாதனிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.
ஓட்டுநர் கவனிக்கவில்லை: இருக்கையின் பின்பகுதியில் அந்த பை மறைவாக இருந்ததால், அதை ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் கவனிக்காமலேயே ஆட்டோவை ஓட்டியுள்ளார். பணம் மீட்கப்பட்டவுடன் ஆட்டோ ஓட்டுநர் விடுவிக்கப்பட்டார். மீட்கப்பட்ட பணம் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா சென்றுபடிக்கத் தேவையான கல்விக்கட்டணம் என்பது குறிப்பிடத் தக்கது.