சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: ‘கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. நீ செய்ய நினைக்கும் செயலை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்’என்பதுபோல, தனிமனிதர் உள்ளத்தை பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர். கிறிஸ்தவ மதத்தை பரப்பிட தமிழகம் வந்த சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை. இதில் பலருக்கு சிலைகள் நிறுவிஉள்ளது திமுக அரசு. கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்தது முதல் உபதேசியார் நல வாரியம் தொடங்கியது, ஜெருசலேம் புனித பயணம் செல்ல அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு மானியம் உயர்வு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டும் இந்த அரசின் சார்பில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ‘மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்’ என்ற இயேசுவின் போதனையை மனதில் வைத்து, கவலைகள் மறந்து,இன்பம் நிறைந்து, நண்பர்கள், உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும்கிறிஸ்தவ மக்களுக்கு நல்வாழ்த்து கள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: செல்வங்களில் மேலானது அன்புதான் என்பதை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டிய இயேசுவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் திரு நாளை கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரது துன்பங்கள் நீங்கட்டும், இன்பங்கள் பொங்கட்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அர்ப்பணிப்பு, மனிதாபிமான உணர்வு, சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உலகெங்கிலும் போராட்டமும், துன்பமும் நிறைந்த மனித வாழ்வில், இதய காயங்களுக்கு மருந்தாக உபதேசங்களை தந்தஇயேசுவின் பிறந்தநாளில் அன்பை யும், கனிவையும் பரிமாறும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நண்பர்களிடம் மட்டுமின்றி, எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும் என்று போதித்தவர் இயேசுபிரான். சக மனிதர்களை மதிக்க கற்றுக் கொடுத்தவர். அவரது பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துகள்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மக்கள் அனைவரும் ஒற்றுமை, அமைதி, நிம்மதியோடு, மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் விழாவை உறவினர்கள், நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாட நல்வாழ்த்துகள்.
விசிக தலைவர் திருமாவளவன்: வெறுப்பு அரசியல், உயர்வு – தாழ்வு பாகுபாட்டுக்கு எதிரானவை இயேசுவின் போதனைகள். கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இனியவாழ்த்துகள். உலகமெங்கும் சகோதரத்துவத்தை மேன்மேலும் வளர்த்தெடுக்க இந்நாளில் உறுதியேற் போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெருகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும் எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்று போதித்த இயேசு அவதரித்த நாளில், அனைவரது வாழ்விலும் அன்பு பெருகி, ஆனந்தம் தவழ இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: அன்பு, கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்து மஸ் திருநாளை
கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: எண்ணிலடங்கா துன்பங்கள், துயரங்களை சந்தித்த போதிலும் அன்புதான் உலகின் மிகப் பெரிய சக்தி என்பதை நிரூபித்தவர் இயேசு. அவர் அவ தரித்த கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
இதேபோல பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை, சு.திருநாவுக்கரசர் எம்.பி., சமக தலைவர் சரத்குமார், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.