சென்னை: பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் அவரது உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவரது உருவப் படம்அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்பழகனின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல சென்னை அண்ணா அறிவாலயம், கீழ்ப்பாக்கம் அன்பழகன் இல்லம் மற்றும் டிபிஐ வளாகம்ஆகியவற்றில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்பழகனின் படத்துக்கு திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், துணை அமைப்பு செயலாளர்கள் ப.தாயகம் கவி, எஸ்.ஆஸ்டின், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
வாழ்த்துச் செய்தி: இதற்கிடையே பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறி யிருப்பதாவது: “யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்! தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்! பெரியாரின் பிள்ளைகள் நாம் பேரறிஞர் தம்பிகள் நாம் – என்றும் பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கவிபாடிய கட்சியின் கொள்கைத்தூண் பேராசிரியர் அன்பழகன். தமிழர் நல்வாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் பேராசிரியர். எனது வளர்ச்சிக்கு ஊக்கமளித்தவர். அவரது பிறந்தநாளில் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட் டிருந்தார்.
திக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “திராவிடர் இயக்கத்தின் ஈடு இணையற்ற பேராசிரியர் க.அன்பழகன், மாணவப் பருவம் முதலே பெரியாரின் கொள்கையில் ஈர்ப்பு கொண்டவர். அண்ணாவின் தனி அன்பை பெற்றவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர். திராவிடக் கொள்கையின் தீர்க்கமான விளக்கவுரை புகன்றவர். வாழ்க பெரியார் வழிவந்த பேராசிரியர்” என்று தெரிவித்துள்ளார்.