சென்னை: மிக்ஜாம் புயல் கடந்த டிச. 3, 4 தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வாழ்வாதாரம் பாதி்க்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதில், சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டில் 4 வட்டங்கள், காஞ்சிபுரத்தில் 2 மற்றும் திருவள்ளூரில் 6 வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், இந்த பகுதிகளில் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து, உடைகள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு, மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள், வருமான வரிசெலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வாழ்வாதாரம், துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்கள், வங்கிக்கணக்கு விவரங்களுடன் நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த டிச.14-ம் தேதி முதல் டிச.16 வரை டோக்கன் வழங்கப்பட்டது. அப்போதே, பலருக்கும் டோக்கன் கிடைக்கவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நியாயவிலைக்கடை பணியாளர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு, டிச.17-ம் தேதி முதல் ரூ.6 ஆயிரம் விநியோகம் தொடங்கியது.
இதில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரி செலுத்தும் பலருக்கும், சில இடங்களில் சர்க்கரை அட்டை வைத்திருப்போருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதனால், அரசாணையில் குறிப்பிட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உண்மையில் பாதிப்படைந்து, நிவாரணம் கிடைக்காத பலரும் நியாயவிலைக் கடைகளில் தனி வரிசையில் நின்று விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த விண்ணப்பங்கள் முறையாக ஏற்கப்படுமா என்ற சந்தேகமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களிலும் 24.25 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு இயல்பாக ஏற்பட்டுள்ள யாருக்கு நிவாரணம் என்ற சந்தேகத்தையும் அரசு தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.