விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடையின் மூடிகள் சிதிலமடைந்தும், அவற்றில் பலவற்றில் கழிவுநீர் பொங்கி வழிந்து சாலைகளைச் சாக்கடை வெள்ளமாக மாற்றிக்கொண்டும் இருக்கின்றன.
பல நாள்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்த அவலம் தொடர்கதையாக நீண்டுவருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.பாரதி சாலை, பதிவுத்துறை அருகிலுள்ள பாதாளச் சாக்கடையில் பொங்கி வழியும் கழிவுநீர்
இது குறித்த உண்மைநிலையை அறிவதற்காக திருவல்லிக்கேணி பகுதிக்கு ஸ்பாட் விசிட் செய்தோம். ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலிலிருந்து மெரினா கடற்கரைக்குச் செல்லும் பாரதி சாலையில் பயணித்தோம். சாலையின் தொடக்கத்திலேயே அரச மரம் அருகிலுள்ள பாதாளச் சாக்கடை பொங்கி வழிந்து கழிவுநீர் சாலைகளில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கடுத்து மத்திய சென்னை பதிவுத்துறை அலுவலகம் அருகே, பெட், சோபா என முழுக்க ஃபர்னிஷிங் கடைகள் அமைந்திருக்கும் அந்தச் சாலையிலுள்ள மற்றொரு பாதாளச் சாக்கடை மூடியிலிருந்து அதிகப்படியான கழிவுநீர் பொங்கி வழிந்துகொண்டிருந்தது.
தொடர்ந்து அம்மா உணவகம் எதிரேயுள்ள திருப்பத்தில் இருக்கும் பாதாளச் சாக்கடையின் மூடி சாலையிலிருந்து ஓரடி ஆழத்துக்கு உள்வாங்கி பெரும் குழியை உண்டாக்கியிருந்தது. அதில் பல கற்களும் கொட்டப்பட்டிருந்தன. சாலையின் திருப்பத்தில் திரும்பும் பல வாகனங்கள் எதிர்பாராதவிதமாக அந்தக் குழியில் பயணித்து விபத்துகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிக்கொண்டிருந்தது.கவுன்சிலர் அலுவலகம் அமைந்திருக்கும் பாரதி சாலை முச்சந்தி
இவை தவிர, கவுன்சிலர் அலுவலகம் அமைந்திருக்கும் முச்சந்தியிலுள்ள பாதாளச் சாக்கடையின் மூடி கழிவுநீரில் மூழ்கியிருந்தது. வாடகை வாகனங்கள், லோடு ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தச் சாலைகள் முழுக்க கழிவுநீர் ஓடி சாக்கடை, குளமாக மாறியிருந்தது. அதைத் தொடர்ந்து பாரதி சாலையிலேயே பயணித்தோம். புகழ்பெற்ற அமீர் மஹாலின் அருகில் ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது. அதன் எதிர்ப்புறத்தில் அரசு உதவிபெறும் சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி இருக்கிறது. பேருந்துக்காக பொதுமக்களும், பள்ளிக்குச் செல்வதற்காக குழந்தைகளும் நாள்தோறும் வந்து செல்லும் இந்த இடத்தில் சாலையின் ஓரமுள்ள பாதாளச் சாக்கடையின் மூடி உடைந்து நீண்ட நாள்களாக அதிலிருந்து கழிவுநீர் கசிந்துகொண்டிருக்கிறது. எந்தவித முறையான தடுப்பும் இன்றி, தண்ணீர் கேனில் மணல் நிரப்பப்பட்டு, அதில் மரக்கட்டையை ஊன்றி தற்காலிகமாக முன்னெச்சரிக்கை மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. அமீர் மஹால் பேருந்து நிறுத்தம், சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி அருகேயுள்ள பாதாளச் சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீர்
தொடந்து, திருவல்லிக்கேணி நாற்சந்தி ஹைரோட்டைத் தாண்டி அரசமரம் அடர்ந்திருக்கும் பேருந்து நிலையத்தின் அருகே சென்றோம். அதுவும் ஒரு குறுகிய நாற்சந்தி. அதன் நடுவேயுள்ள பாதாளச் சாக்கடையின் மூடி கடுமையான ஆழத்துக்குச் சென்றிருக்கிறது. மிகப்பெரிய துளைபோலக் காட்சியளிக்கும் இந்தப் பாதாளச் சாக்கடையின் அருகில் பழக்கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் அட்டைப் பலகைகளைக்கொண்டு தற்காலிகமாக மூடி வைத்திருக்கின்றனர். திருவல்லிக்கேணி, காயிதே மில்லத் ஹைரோடு
திருவல்லிக்கேணியின் முக்கியச் சாலையான பாரதி சாலையின் நிலைதான் இப்படி என்றால், காயிதே மில்லத் ஹைரோட்டிலும் விதிவிலக்கின்றி பாதாளச் சாக்கடை மூடிகள் சேதமடைந்து கழிவுநீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, பார்த்தசாரதி கோயில் நுழைவாயில் அருகே கெல்லட் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. அதனருகிலுள்ள பாதாளச் சாக்கடை மூடியிலிருந்து கழிவுநீர் கசிந்துகொண்டிருக்கிறது. அதில் தற்காலிகமாக காவல்துறையின் பேரிகார்டு குறுக்கே வைக்கப்பட்டிருக்கிறது.
இவை தவிர எல்லீஸ் ரோட்டிலும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் இருக்கிறது. குறிப்பாக, தேவி தியேட்டர் பின்புறமுள்ள எல்லீஸ் ரோடு அண்ணாசாமி தெருவில் ஒரு பாதாளச் சாக்கடை மூடியிலிருந்து கழிவுநீர் வழிந்தபடி, அந்தச் சாலையையே சாக்கடைக் குளமாக மாற்றியிருக்கிறது. அதேபோல, எல்லீஸ் ரோட்டிலிருந்து வாலாஜா சாலைக்குத் திரும்பும் வளைவில் பாதாளச் சாக்கடையில் மூடியே இல்லாமல் ஆபத்தான முறையில் திறந்துகிடக்கிறது. அதில் பெயரளவுக்கு காவல்துறை பேரிகார்டைக்கொண்டு முட்டுக்கொடுத்து வைத்திருக்கிறது. இவை தவிர தொகுதியின் பல்வேறு சாலைகளின் நடுவேயுள்ள பாதாள சாக்கடை மூடிகளின் நிலை பெரும்பாலும் சிதிலமடைந்த நிலையில், புதிய மூடிகள் மாற்றப்படாமல் இருக்கின்றன.எல்லீஸ் ரோடு மற்றும் அண்ணாசாமி தெரு
தலைநகரில், ஓர் அமைச்சரின் தொகுதியிலேயே கழிவுநீர்க் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல், பாதாளச் சாக்கடையின் மூடிகள் உடைந்தும், பலவற்றில் கழிவுநீர் வெளியேறிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. நடவடிக்கை எடுக்குமா அமைச்சர் உள்ளிட்ட அரசு நிர்வாகம்?