Breaking News
Home / செய்திகள் / நெல்லை, தூத்துக்குடி வறண்ட பகுதிகளுக்கு தாமிரபரணி உபரிநீர் திறந்து வெள்ளோட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

நெல்லை, தூத்துக்குடி வறண்ட பகுதிகளுக்கு தாமிரபரணி உபரிநீர் திறந்து வெள்ளோட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டவறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தமார்ச் 2008-ல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அன்றையமுதல்வர் மு.கருணாநிதி அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கனஅடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது)அணைக்கட்டில் இருந்து 2,765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, அன்றைய முதல்வர்கருணாநிதியால் 2009 பிப்.21-ம்தேதி திட்டப்பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தற்போது, முதல் 3 நிலைகளுக்கான பணிகளும்முழுமையாக முடிக்கப்பட்டு 4-வதுநிலைப்பணிகளும் முடியும் நிலையில் உள்ளன.

வெள்ளநீர்க் கால்வாய்: இதில், திருநெல்வேலியில் 67.1 கி.மீ., தூத்துக்குடியில் 8.10 கி.மீ., என மொத்தம் 75.2 கி.மீ நீளத்துக்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56,933 ஏக்கர்) பாசன வசதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 பேரவை தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 பேரவைத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன்பெறும்.

சோதனை ஓட்டம்: தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *