சென்னை: கோவா விமான நிலையத்துக்கு வந்த தமிழ் பெண் பொறியாளர் ஒருவரிடம், இந்தி தெரியாதா என கேட்டு,இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் அப்பெண்ணை அவமதித்துள்ளார். இதற்கு தமிழக முதல்வர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோவா விமான நிலையத்தில் தமிழ்பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். ‘தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது’ என்றும், ‘இந்தியாவில் உள்ள அனைவரும் இந்திகற்றாக வேண்டும்’ என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக் குரியது. இந்தி அலுவல் மொழியே தவிரதேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும், மரியாதையும் வழங்கப்பட வேண் டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கோவா விமான நிலையத்துக்கு வந்த தமிழ் பெண் பயணியிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர், “இந்தி தெரியுமா? தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைவரும்இந்தி கற்க வேண்டும்” என்று கூறி அவரை அவமதித்திருக்கிறார். விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்தியதொழில் பாதுகாப்புப் படையினரில்பலர், தங்களின் பணி என்ன? என்பதை மறந்துவிட்டு, இந்தி தேசியமொழி, அதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி யல்ல என்பதை அவர்களது உயரதிகாரிகள் புரிய வைக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. பல்வேறு மொழிகளைப் போல இந்தியும் ஒரு அலுவல் மொழியே தவிரதேசிய மொழி கிடையாது என்பதைஇந்திய அரசியலமைப்புச் சட்டம்பலமுறை தெளிவுபடுத்தியிருக் கிறது. இதை உணர்ந்து, விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.