சென்னை: தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் நலன் காக்கும் வகையில், ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தினசரி சுமார் 32 லட்சம் லிட்டர் பாலை 3.87 லட்சம் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 ஆகவும், எருமை பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடு செய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிடவும் ஒரு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையாக வழங்கிட முதல்வர் உத்தர விட்டுள்ளார். இது டிச.18-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 லிருந்து ரூ.38 ஆகவும், எருமை பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44- லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலமாக 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.
பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் பால் உற்பத்தி செய்து கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கி, பொருளாதார மேம்பாடு அடைவதுடன் கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை ஆவின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முகமது அலி கூறும்போது, “ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த கேட்டிருந்தோம். ஆனால், ஊக்கத்தொகையை உயர்த்தி உள்ளனர். இதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது ஏமாற்றம்அளிக்கிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாட்டு தீவனத்துக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் ஆகிய2 கோரிக்கைகளை உடனடியாகநிறைவேற்ற வேண்டும்” என்றார்.
பாஜக வரவேற்பு: இதுகுறித்து ட்விட்டரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பகிர்வில் ‘‘பால் கொள்முதல் விலை ஏற்றத்துக்கான அறிவிப்பை பாஜக வரவேற்கிறது. தற்போதுள்ள பால் கொள்முதல் அளவு முந்தைய ஆட்சிக் காலத்தை ஒப்பிடும் பொழுது குறைவாக உள்ளது என்பதையும் நாங்கள் தொடர்ச்சியாக கோடிட்டுக் காட்டி வருகிறோம். முன்பை போல் சராசரியாக ஒரு நாளில் குறைந்தபட்சம் 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.