சென்னை, நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் யுஜிசி நெட் மறுதேர்வு நாளை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 2 முறை தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவோருக்கான படிப்புகளுக்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி நடப்பு ஆண்டில் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தேர்வு நடத்தப்பட்ட நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை எம்.பி, மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் புயல் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள் நாளை மறுதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.