சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.மிக்ஜாம் புயல்
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் டிசம்பர் 9-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6,000 வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.
‘புயல், வெள்ளத்தால்உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீட்டுத் தொகையை நான்கு லட்சம் ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுவருகிறது. அது, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல, சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய், தற்போது எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்’ என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி
அதேபோல, ‘மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருந்தால், (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்’ என்றும் தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது. ஆடு மாடு உள்ளிட்ட வேறு பல இழப்புகளுக்கும் இழப்பீடு தொகைகளை அரசு அறிவித்திருக்கிறது.
ஆனால், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் இழப்பீடு போதுமானதல்ல என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ‘மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாய் போதாது. அதை, 12,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.எடப்பாடி பழனிசாமி
எந்த நிபந்தனையும் விதிக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண நிதியை வழங்க வேண்டும்’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார்.
தி.மு-க அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட குற்றம்சாட்டியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘தி.மு.க ஆட்சிக்கு வந்து 31 மாதங்களாகின்றன. ஆனால், முறையாக மழைநீர் வடிகால் பணிகளைச் செய்யவில்லை. அதனால், மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து பெரும் துயரத்தில் இருக்கிறார்கள்.அண்ணாமலை
அவர்கள், ஆட்சியாளர்கள் மீது தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகிறார்கள். தி.மு.க அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை மிகவும் சொற்பமானது. எனவே, இது பாதிக்கப்பட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ – உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
இந்தமழை வெள்ளத்தில்ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைந்திருக்கின்றன. எனவே, உரிய நிறுவனங்களின் மூலமாக பகுதி வாரியாக சிறப்பு வாகன பழுது நீக்கும் முகாம்களை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் செலவில் பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.ஸ்டாலின்
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிந்த பிறகும் கழிவுநீர் கலந்த சேறும் சகதியும் தெருக்களில் காணப்படுகின்றன. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் சேறு, சகதி, குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும். கிருமிநாசினிகளைத் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசுகையில், “எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு இந்த நிவாரணம் பெரிய அளவில் உதவாது. வீட்டில் இருக்கும் பொருள்கள் தொடங்கி, வாகனங்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி வேலைக்கு செல்லும் எங்களால் ஒரு வாரம் பணிக்கு செல்ல முடியவில்லை. கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய பல பொருள்கள் குப்பை தொட்டிக்கு தான் போனது. அதனால் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்கிறார்கள்.மிக்ஜாம் புயல்
அரசு தரப்பில் பேசுகையில், `மக்களில் சிலருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு பாதிப்பு குறைவாக இருக்கும். அதனை எல்லாம் கணக்கிட்டு தனிதனியே கொடுக்க வேண்டும் என்றால் காலதாமதம் ஏற்படும். தற்போது உடனடி நிவாரணம் அளிக்கப்பட வேண்டியது தேவையாக உள்ளது. மேலும் சுகாதாரம் தொடர்பான சிக்கல்களுக்கு மருத்துவ முகாம்களும், சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்களும் நடைபெறுகிறது. மேலும் வாகனங்களை பொறுத்தவரையில், இன்ஸுரன்ஸ் நிறுவனங்கள் முறையாக, உடனடியாக பாதிப்புக்கு உண்டான தொகையை அளிக்க வேண்டும் என அரசு சார்பில் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்’ என்கிறார்கள்.