சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்-ராபின் சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியில் விளையாடுவார்கள். இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள வீரர்களின் சராசரி எலோ ரேட்டிங் 2,711 ஆக உள்ளது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி (2727), டி.குகேஷ் (2720), பி. ஹரிகிருஷ்ணா (2696) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ (2742), அமெரிக்காவின் லெவோன் அரோனியன் (2723), ஹங்கேரியின் சனான் சுகிரோவ் (2703), உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ் (2691), செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே (2689)ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இந்த தொடரானது டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோருக்கு கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.
சராசரி 2700 எலோ ரேட்டிங் புள்ளிகள் கொண்ட கிளாசிக்கல் சூப்பர் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த போட்டியை தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்துகின்றன. தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்பவர் ரூ.10 லட்சத்தையும், 3-வது இடத்தை பிடிப்பவர்கள் ரூ.8 லட்சத்தையும் பெறுவார்கள். 4 முதல் 8-வது இடங்களை பிடிப்பவர்கள் முறையே ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3.5 லட்சம், ரூ.2.5 லட்சம், ரூ.2 லட்சம் பெறுவார்கள்.