சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை அழைத்து வர போலீஸ் துபாய் செல்கிறது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜக நிர்வாகி ஹரீஷ் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருந்தனர்.
இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், நாகராஜன், பேச்சி முத்துராஜா, நடிகர் ரூஸோ உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர். மொத்தம் 61 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர வங்கிக் கணக்கில் இருந்த ரூ.96 கோடி முதலீடு, ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜசேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்லாட் ஒப்பந்தப்படி துபாயில் பதுங்கி இருந்த ராஜசேகரை பிடித்து தருமாறு தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கை வைத்திருந்தது. இதற்கிடையே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விளக்கம் கேட்டு 6 முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. மேலும், ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் அபுதாபியல் பதுங்கி இருந்து மேலான் இயக்குநர் ராஜசேகரை கடந்த நவம்பர் 30ம் தேதி இன்டர்போல் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர சர்வதேச சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை அழைத்து வர போலீஸ் துபாய் செல்கிறது. துபாயில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜசேகர் சிறையில் உள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துபாய் நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு அழைத்துவர துபாய் விரைகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே துபாய் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளன. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நாளை நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடைபெறுகிறது. துபாயில் இருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ், நாளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.