சென்னை: ட்ரோன் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரம் இந்தியாவில் தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
வேளாண்மை, கட்டுமானம், மருத்துவம், நீர் மேலாண்மை, காவல் என பல்வேறு துறைகளிலும் ட்ரோன்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. புயல், வெள்ளம், நிலச்சரிவு உள் ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ட்ரோன்கள் மிகவும் பயனளிக்கக் கூடியவையாக உள்ளன.
ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க, 2022-ம் ஆண்டு ட்ரோன் வடிவமைப்பு, தயாரிப்புக்கென்று தனிக் கழகத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. கடந்த ஜூன் மாதம் சென்னை காவல் துறையில், ரூ.3.6 கோடி முதலீட்டில் ட்ரோன் கண்காணிப்புக்கென்று தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், கடந்த டிசம்பர் 4, திங்கள்கிழமை சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பல இடங்களில் மின்சேவை நிறுத்தப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியது. அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் திணறினர்.
வெள்ள நிலைமையை ஆராய வும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கவும் ட்ரோன் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 8-ம் தேதி வரையில் தமிழ்நாடு அரசு ட்ரோன்சேவையை பயன்படுத்தியாக தெரியவில்லை.
விமர்சனங்கள்: கடந்த ஆண்டு உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவு, அசாம், குஜராத்மாநிலங்களில் வெள்ள நிவாரணப் பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. சிறப்பான ட்ரோன் வசதியைக் கொண்ட தமிழ்நாடு ஏன், தற்போதைய வெள்ள பாதிப்பில் ட்ரோன்களைப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிசம்பர் 8-ம் தேதி, தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, “வெள்ளம் தொடர்பான களவிவரங்களை சேகரிக்க ட்ரோன்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
அவர் அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில், பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. “மழையின் தாக்கம் அதிகம் இருந்த ஆரம்ப தினங்களில் ட்ரோன்களை பயன்படுத்தி இருந்தால், எந்தெந்தப் பகுதிகளில் வெள்ள நீர்அதிகம் சூழ்ந்துள்ளது, எங்கு தண்ணீர்ஓட்டம் தடைபட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக கிடைத்திருக்கும். அந்தத் தரவுகளின் அடிப்படையில், வெள்ளப் பாதிப்பை குறைப்பதற்கான திட்டங்களை வகுத்து மக்களை மீட்டிருக்க முடியும். மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை உடனடியாக கொண்டு சேர்த்திருக்க முடியும். ஆனால், தமிழ்நாடு அரசு வெள்ளப் பாதிப்பு தீவிரமாக இருந்த நாட்களில் ட்ரோன்களைப் பயன்படுத்தாமல், வெள்ளம் வடிவந்த பிறகு அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது” என்று பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தெளிவான விதிமுறை அவசியம்: தமிழக அரசு ஏன் உடனடியாக ட்ரோன்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவரவில்லை என்பது தொடர்பாக எம்ஐடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஸ்ரீகாந்த் ‘இந்து தமிழ்திசை’யிடம் கூறும்போது, “ட்ரோன் பறப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் நிர்ணயித்துள்ளது. விமான நிலையம், மத்திய பாதுகாப்பு அமைப்பு அமைந்திருக்கும் இடம், சட்டமன்றம் உள்ளிட்டபகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தொலைவுகள் சிவப்பு மண்டலமாக வரை யறுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ட்ரோன் பறக்க அனுமதி இல்லை. மீறி,ட்ரோன்களை இயக்கினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், பேரிடர் காலங்களில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம், சிறப்பு அனுமதி பெற்று ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும்.
வெள்ளப் பாதிப்பு தீவிரமாக இருந்த ஆரம்ப நாட்களில் ட்ரோன்களைப் பயன்படுத்த தமிழக அரசு என்ன முன்னெடுப்புகளை மேற்கொண்டது என்பது குறித்து தெரியவில்லை.
இனி, பேரிடர் சமயங்களில் ட்ரோன்களை உடனடியாக பயன்படுத்துவது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே தெளிவான விதிமுறைகளைக் உருவாக்குவது அவசியம்” என்று தெரிவித்தார்.