சென்னை: தமிழகம் முழுவதும் 7 வாரங்களாக நடந்த மருத்துவ முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அப்பாவு நகர், பன்னீர்செல்வம் நகர், காரணிஸ்வரர் நகர், ஜாபகர்கான் பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், மடுவின்கரை, கோட்டூர்புரம் பகுதிகளில் 7 தனியார் மருத்துவமனைகள் பங்கேற்ற மழைக்கால மருத்துவ முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, மண்டல குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வடகிழக்குப் பருவ மழை தொடங்கப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 7-வது வாரமாக நேற்று முன்தினம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
இதுவரை நடத்தப்பட்ட 16,516 முகாம்கள் மூலம் 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர். தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதன் காரணமாக டெங்கு பாதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2015-ல் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை நாடாளுமன்றமே விமர்சனம் செய்துள்ளது. அதனால், இந்த அரசைப் பற்றிக் குறை சொல்ல எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும், ஜெயக்குமாருக்கும் எந்த தார்மீக உரிமை இல்லை.