சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் ஒன்றை தெலுங்கானாவில் கொண்டு வருவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
தெலங்கானா முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி. காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டிக்கு பதவியேற்பு செய்து வைத்தார் ஆளுநர் தமிழிசை.
தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிபிஐ 1 இடத்தில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் பிஆர்எஸ் கட்சி பறிகொடுத்தது.
தெலுங்கானா தேர்தல்: இந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கானா தேர்தல் மட்டும்தான் தென்னிந்தியாவில் நடந்த ஒரே தேர்தல் ஆகும். மொத்தமாக 119 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்து உள்ளது. அங்கே கடந்த 4 வருடமாக பாஜக – டிஆர்எஸ் (பிஆர்எஸ்) என்ற நிலைதான் இருந்தது. ஆனால் கடந்த 1 வருடமாக அங்கே சிறப்பாக செயல்பட்டு காங்கிரஸ் அடித்து தூக்கி மேலே வந்தது.
சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது., இன்னொரு பக்கம் பாஜகவோ பெரிய அளவில் அரசியல் செய்ய முடியாமல்.. எந்த பாயிண்டும் கிடைக்காமல்.. பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று திக்கு தெரியாத காட்டில் தவித்துக்கொண்டு.. கடைசியில் கோட்டையை கோட்டை விட்டது..
திமுக மாடலை கையில் எடுத்த காங்கிரஸ் பார்முலா: காங்கிரஸ் கட்சி அதே கர்நாடக வெற்றி பார்முலாவான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாத உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. அதோடு இல்லாமல் ரேவந் ரெட்டி செய்த அரசியல் பெரிய அளவில் அங்கே காங்கிரசுக்கு சாதகமாக மாறியது. கர்நாடகாவை தொடர்ந்து தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான தெலங்கானாவிலும் காங்கிரஸ் காலூன்றியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ் பின்புலம்; அம்மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்த ரேவந்த் ரெட்டிதான். இவர் தற்போது காங்கிரஸ்காரராக இருந்தாலும் தொடக்கத்தில் இந்துத்துவவாதியாக இருந்திருக்கிறார். ஒன்றுபட்ட ஆந்திராவின் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றான உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கல்வியை தாண்டி அரசியலையும் மாணவர்கள் பயின்றார்கள். இதில்தான் ரேவந்த் ரெட்டியும் அரசியல் பயின்றிருக்கிறார். அங்கே அவர் இந்துத்துவா அரசியல். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பில் இணைந்து ரேவந்த் நிர்வாகியாக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் மாடல் திட்டம்: தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் ஒன்றை தெலுங்கானாவில் கொண்டு வருவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்வராக ஸ்டாலின் வந்த பின் போட்ட கையெழுத்துகளில் ஒன்று பெண்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம் என்பதாகும்.
இதே திட்டத்தை காங்கிரஸ் வாக்குறுதியாக கர்நாடகாவில் அறிவித்து வென்று.. அதை அமலுக்கு கொண்டு வந்தது. தெலுங்கானாவில் கூட இதை காங்கிரஸ் வாக்குறுதியாக அறிவித்தது. இந்த நிலையில் நாளை ரேவந்த் ரெட்டி இதை அமலாக்க உள்ளார். நாளை இந்த திட்டத்திற்கு கையெழுத்து போட உள்ளார். தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து இனி தெலுங்கானாவில் நாளை முதல் பெண்கள் மாநகர பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.