சென்னை: மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரிசி, பெட் சீட், பால், பிஸ்கேட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வழங்கினார்.
மிக்ஜாம் புயல் கடந்து சென்றாலும், அதிகனமழை ஓய்ந்தபோதிலும், அதன் பாதிப்புகள் இன்னும் வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளை விட்டுச் செல்லவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் ஐந்தாவது நாளாக சில இடங்களில் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தற்போதும் தண்ணீர் குளம்போல தேங்கி, சாக்கடை போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வெள்ளத்தால் பாதிப்படைந்த மடிப்பாக்கம் பகுதியை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார். அமைச்சர்கள், சென்னை மாநகர அதிகாரிகள், மின்சார ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இரவும் பகலுமாய் களப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்னும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெருப்பு மேடு, செட்டித்தோட்டம், ஜோதி அம்மாள் நகர் (சைதாப்பேட்டை ஆடுதொட்டி அருகில்) ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரிசி, பெட் சீட், பால், பிஸ்கேட், பிரட் ஆகிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.