சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில், சென்னையில் பல இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் சென்னை முழுவதும் 80 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் தேங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக தீர்வு காணப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னையை ஒட்டி ஆந்திரா பகுதியில் கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னைக்கு வழக்கத்தை விட 29 சதவிகிதம் கூடுதலாக மழை பொழிவை கொடுத்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியது.
மழை நின்ற சில மணி நேரங்களில் பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பின்னரும், இன்னும் இடுப்பளவுக்கு பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களுக்குள் மீட்பு படையினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல உணவு தேவைப்படுவோருக்கு படகில் சென்று உணவு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னைக்குள் அரசு பேருந்து போக்குவரத்து சேவைகள் இன்று தொடங்கியுள்ளன. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கைழகம் கூறுகையில், “சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் 80% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மழைநீர் அதிகம் தேங்கியுள்ள மீட்புப்பணிக்காக மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படவில்லை” என தெரிவித்திருக்கிறது.
மழை எங்களை வேரோடு சாய்த்துவிட்டது.. இன்சூரன்ஸும் கிடைக்காதாம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!
சென்னையில், விமான நிலையம் முதல் அண்ணா சாலை வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் தடையற்ற போக்குவரத்து உள்ளது. புழல் ஏரி நீர் திறப்பால் மஞ்சம்பாக்கம் – வடபெரும்பாம்பாக்கம் இடையே போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டிருக்கிறது. கணேசபுரம் சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை – அரங்கநாதன் சுரங்கப்பாதை, சி.பி. சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, சூளைமேடு லயோலா சுரங்கப்பாதை, கதிர்வேடு சுரங்கப்பாதை என சென்னை முழுவதும் 11 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.
புறநகர் ரயில் சேவையை பொறுத்த அளவில், சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னையில் எழும்பூரில் இருந்து மட்டுமே புறப்பட்டு, மீண்டும் எழும்பூர் வந்தடையும் என்றும், இந்த மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம் இடையே மற்றும் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையேயும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.