Breaking News
Home / செய்திகள் / மழை எங்களை வேரோடு சாய்த்துவிட்டது.. இன்சூரன்ஸும் கிடைக்காதாம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!

மழை எங்களை வேரோடு சாய்த்துவிட்டது.. இன்சூரன்ஸும் கிடைக்காதாம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!

சென்னை: மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது என சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையை புரட்டிப் போட்ட பெருமழை, யாரையும் விட்டுவைக்கவில்லை. தமிழின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘தேசாந்திரி’ பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். சென்னையில் கொட்டிய கனமழை காரணமாக, புத்தக குடோனுக்குள் மழை நீர் சென்றதால் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வேதனையுடன் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள பதிவில், “நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின. கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாய்க்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி கொண்டு வந்து வீடு முழுவதும் நிரப்பியிருக்கிறோம்.

நேற்று முழுவதும் வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரும் நிலை. இரண்டு படிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. மின்சாரமில்லை. இணைய தொடர்பில்லை. எவரையும் உதவி கேட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆயினும் அருகிலுள்ள நண்பர்கள் ஒடியோடி வந்து புத்தகங்களைக் காப்பாற்ற உறுதுணை செய்தார்கள். மழை நின்ற இன்றும் மின்சாரமில்லை. வீட்டைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்முன்னே புத்தகங்களை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வடியாத வெள்ளம்.. வாடும் மக்கள்.. சென்னையில் இன்று ஹெலிகாஃப்டர் மூலம் உணவு விநியோகம்

இத்தனை ஆண்டுகாலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் வங்கி கடன் உதவியாலும் தான் தேசாந்திரி பதிப்பகம் துவங்கினோம். உங்கள் ஆதரவால் வெற்றிகரமாகவே நடத்தினோம். ஆனால் நேற்றைய மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது. புத்தகக் குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டார்கள்.

இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை. நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பார்கள் என்ற நம்பிகையோடு.” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *