சென்னை: தொடர்மழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவையான ஆவின்பால் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர். மேலும், சில இடங்களில் அதிக விலைக்கு பழைய பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லும் நிலையும் ஏற்பட்டது. `மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும்அவதிப்பட்டனர். குறிப்பாக, குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும்இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்கேபி நகர்பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு,செனாய்நகர், கோயம்பேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உட்படபல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. சென்னையில் ஆவின் பாலைபொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தொடர்மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் பால் விநியோகம் மிகக்குறைவாகவே இருந்தது.
ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அதிக விலைக்கு பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பால், பழைய பாக்கெட் என்பதால், திரிந்து கெட்டுப்போனது. எனவே, அத்தியா வசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, “அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இதுதவிர, மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால், பால் விநியோகம் பாதித்தது. புதன்கிழமை ஆவின்பால் விநியோகம் சீராகிவிடும்” என்றனர்.