Breaking News
Home / செய்திகள் / சென்னை வெள்ளம் | பயணிகளுக்கு கைகொடுத்த மெட்ரோ ரயில் சேவை

சென்னை வெள்ளம் | பயணிகளுக்கு கைகொடுத்த மெட்ரோ ரயில் சேவை

சென்னை: `மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் ரயில், பேருந்து சேவை பாதிக்கப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில்கள்எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல இயங்கின, இதனால், பயணிகள் நிம்மதியாக பயணித்தனர்.குறிப்பாக, அத்தியாவசியப் பணிக்கு சென்றவர்களுக்கு மெட்ரோ ரயில் சேவை பேருதவியாக இருந்தது. புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3-ம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை காற்றுடன் தொடர் மழை பெய்தது. இதனால், சாலைகளிலும் ஆங்காங்கே குளம்போல, மழைநீர் தேங்கியது. இதனால், மாநகர பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம், உயர்மின் அழுத்த சாதனங்களில் பாதிப்பு போன்ற காரணங்களால், கடந்த 2 நாட்களாக மின் ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த 2நாட்களாக பெரிய அளவில் பாதிப்பு இன்றி தொடர்ந்து இயங்கியது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர். குறிப்பாக, அத்தியாவசியப் பணிகளுக்கு சென்றவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு மிகவும் உதவியாக இருந்தது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால், பேருந்து சேவை இயங்குமா என்ற சந்தேகத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி பொதுமக்கள் வந்து, மெட்ரோ ரயில்களில் நிம்மதியாக பயணம் செய்தனர்.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் கடந்த 4-ம் தேதி மட்டும்88,370 பேர் பயணம் செய்தனர்என்றும், மெட்ரோ ரயில் இயக்குவது சவாலாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டதாகவும் அரசு தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தார். புயல் நேரத்தில் மெட்ரோ ரயில்களில் குறைவான மக்கள் பயணம் செய்தாலும், எவ்வித தடையுமின்றி தொடர் சேவை வழங்கிய மெட்ரோ ரயில் நிறுவனத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மெட்ரோ பார்க்கிங் பகுதி ஊழியர்களுக்கு நிழற்குடை தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பல ரயில் நிலையங்களில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை பாதுகாக்கும் ஊழியர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், அவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக, ஆலந்தூர், கோயம்பேடு, திருமங்கலம் உள்ளிட்ட முக்கிய மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாத நிலை உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ஆலந்தூர் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள், மழையிலும், வெயிலிலும் சிரமப்படுகின்றனர். போதிய கழிவறை வசதியும் இல்லை. பார்க்கிங் பகுதியில் பயணிகளுக்கு வழிகாட்டியாகவும், வாகனங்களை பாதுகாக்கும் பாதுகாவலர்களாகவும் உள்ள இவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *