சென்னை: சென்னையில் மருத்துவமனைகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற மிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு அந்தப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரடியாக களமிறங்கி கவனித்து வருகிறார்.
சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கிண்டி கிங்ஸ் அரசு மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் அதனை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதே போல் சென்னையில் இன்னும் பல பகுதிகளில் மருத்துவமனைகளை சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தாம்பரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்திற்குள் செல்ல முடியாத வகையில் மழைநீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமல்ல மருத்துவமனையின் தரைத்தளத்திலும் தண்ணீர் புகுந்ததால், மருத்துவமனையின் தரைதளத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உடனடியாக முதல் தளத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தான் சென்னை, கிண்டி கிங்ஸ் அரசு பல்நோக்கு மருத்துவமனையை சுற்றியும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாதவாறு அனைத்து மாற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் மின் தடைக்கு மாற்றாக ஜெனரேட்டகளை இயக்கும் வகையில் போதுமான எரிபொருள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட 2 மருத்துவமனைகளிலும் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எவ வேலு, போர்க்கால அடிப்படையில் முதல் வேலையாக மருத்துவமனைகளை சூழ்ந்த வெள்ள நீரை மோட்டார் பம்பு செட் மூலம் அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அரசு மருத்துவமனைகளை போலவே சென்னை மாநகர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளை சூழ்ந்த மழை நீரை அகற்ற அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார்.