சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக உருமாறியது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டன.
பலத்த மழை, தொடர் காற்று, வேகமாக நிரம்பிய ஏரிகள், வெளியேற்றப்படும் நீரை உள்வாங்காத கடல் என சென்னையைத் தலைகீழாக்கியிருக்கிறது இந்தப் புயல்.முதல்வர் ஸ்டாலின்
நிவாரணப் பணிகளும், சீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மற்றப் பகுதிகளிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் வேகமாகச் செய்யப்படுகின்றன. இன்னும் பல இடங்களில் மழைநீர் வெளியேற்றப்படவில்லை. இதற்கிடையில், மழைநீர் சூழ்ந்த பகுதிகள், அடையாறு, கூவம் கரைப் பகுதி மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு, அரசு ஏற்படுத்திய முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களை நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடசென்னை பகுதியான கண்ணப்பர் திடல், மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.முதல்வர் ஸ்டாலின்
அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததோடு, ஆய்வும் நடத்தினார். முதல்வருடன் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு, அந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு உள்ளனர். இங்கு ஆய்வு முடிந்ததும், வால்டாக்ஸ் சாலை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முதல்வர் ஆய்வு செய்யவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கிடையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ள நீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், சுமார் 4,000 கோடி ரூபாய் செலவு செய்து, வெள்ள நீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் காரணமாகத்தான் வரலாறு காணாத இந்த வெள்ளத்தை நாம் எதிர்கொண்டபோதும், அதன் தாக்கம் கடந்த காலத்தைவிட குறைவாகவே இருந்தது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிரிழப்பு போன்ற சிக்கல்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கின்றன.முதல்வர் ஸ்டாலின்
2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் இறந்தார்கள். ஆனால், தற்போது 2015 மழையைவிட மிக அதிக மழை பெய்தும், 7 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இந்த உயிரிழப்பும் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான். 9 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. காலையிலிருந்து 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. மழைநீர் வடிகால் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், ஆறுகளின் நீர் கடலில் சேர்வதில் சிக்கல் இருந்ததால்தான், நீர் வடிதல் வேகம் குறைவாக இருக்கிறது.
2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திட்டமிடப்படாமல் திறந்துவிடப்பட்டதுதான் அப்போதைய வெள்ளத்துக்கான முக்கியக் காரணம். அது செயற்கை வெள்ளம். தற்போது வந்த வெள்ளம், இயற்கை வெள்ளம். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணாமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீரை, வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே திறந்து, சரியான அளவில் பராமரிக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெள்ள தாக்கத்தைக் குறைக்க, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் எனப் பல்வேறு துறை அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.முதல்வர் ஸ்டாலின்
4,000 கோடி ரூபாய் செலவு செய்தும் சென்னை மிதக்கிறது எனச் சிலர் அரசியல் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்தை பெரும் சேதமின்றி கடந்திருக்க, அரசின் இது போன்ற திட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்துவிட வேண்டாம். மத்திய அரசிடம் மாபெரும் வெள்ளத்தை எதிர்கொண்ட தமிழ்நாட்டின் நிவாரணப் பணிக்காக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு கடிதம் எழுதப்போகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.