சென்னை: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி இப்போது ஆட்சியை அமைத்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இன்றைய தினம் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று நடைபெற இருந்த வாக்கு எண்ணிக்கை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று வரை வெளியான சர்வேக்களில் இதில் தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது. மத்தியப் பிரதேசத்தில் தொங்கு சட்டசபையும் ராஜஸ்தானில் பாஜகவும் வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது.
தேர்தல் முடிவுகள்: ஆனால், இன்று தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியைக் காங்கிரஸ் வீழ்த்தியது. என்ற போதிலும், மற்ற மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. 4இல் 3 மாநிலங்களில் பாஜக இப்போது ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்தி ஹார்ட் ஹெண்டில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் 116 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் சூழல் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் சூழலே இருக்கிறது. அவர்கள் 114 இடங்களில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
அதேநேரம் சத்தீஸ்கரில் தான் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே காங்கிரஸ் பெரும்பான்மையைப் பிடிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அங்கும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வியே கிடைத்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதிலும் உதயநிதி சனாதனம் குறித்துப் பேசியிருந்த நிலையில், அதுவே தோல்விக்குக் காரணம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
சனாதனம்: குறிப்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவரே சனாதன எதிர்ப்பு பேச்சுகள் கட்சியைத் தோல்வி கடலில் மூழ்கடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் நிபுணர் டெஷீன் பூனாவாலாவும் சனாதனத்தை எதிர்த்ததே வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். பாஜகவின் கேடி ராகவன், கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் எனப் பலரும் கிட்டதட்ட இதே கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் மனோ தங்கராஜ்: இதற்கிடையே தெலுங்கானாவில் கிடைத்த வெற்றி என்பது சனாதன சாதீய பாகுபாட்டிற்கு எதிரான வெற்றி என்று அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகாவை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது சனாதன சாதீய பாகுபாட்டிற்கு எதிரான சமூக நீதிக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
மக்களின் உணர்வுகளை தூண்டி பெறப்படும் தேர்தல் வெற்றி நாட்டை இருண்ட காலத்திற்குத் தள்ளிவிடும். பெரியாரின் பகுத்தறிவு பாதை தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு எடுத்துச் சென்ற பாதை. பெரியார், அம்பேத்கரின் கொள்கைகளை தான் இன்றைய தலைமுறை தமிழ்நாடு உதயநிதி பேசுகிறார். பகுத்தறிவு சிந்தனைகளை நாடு முழுவதும் பரப்புவோம், 2024-ஐ நமதாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.