சென்னை: சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் அமைய உள்ள, உலகின் மிக பெரிய கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளில் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலைகள் பெரும்பாலும் ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில், தினம் 1.8 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.இதில், பல்வேறு வழிமுறைகள் வாயிலாக, தினம் 1.1 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. எனினும், பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் அந்த வளாகத்தில், தினம் தலா, 75 லட்சம் லிட்டர், 20 லட்சம் லிட்டர் திறனில், 2 புதிய கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க அணு சக்தி துறை முடிவு செய்தது.அணுசக்தி அடிப்படையில் ‘ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ்’ தொழில்நுட்பத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.உலகின் மிக பெரிய கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை என்பதால் இது குறித்த விபரங்கள், சர்வதேச அணுசக்தி முகமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒப்புதலில் சிக்கல்இந்நிலையில், இத்திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளில் ஒப்புதல் பெற அணு சக்தி துறை விண்ணப்பித்தது. மாவட்ட நிலையில் இந்த விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு மாநில அளவிலான குழுமத்துக்கு அனுப்பப்பட்டது.சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமத்தின் சமீபத்திய கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பான வல்லுனர் குழு அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், 18 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும், வளர்ச்சி திட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட இடத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், இதற்கு தேசிய அளவிலான கடலோர ஒழுங்குமுறை மண்டல குழும ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மாநில அளவில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அடிப்படையில், தேசிய குழுமத்தில் விரைவில் ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.