சென்னை: திமுக மாநில வர்த்தகர் அணி சார்பில் கலை இலக்கிய நாடகத் திருவிழா திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி.முத்துமாணிக்கம் தலைமை வகித்து பேசியதாவது:
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக பாஜ தேய்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், உத்திரபிரதேசத்தில் கூட மிகப் பெரிய சரிவை தான் சந்திக்கும். தேசிய அளவில் பாஜ கூட்டணியில் 37 கட்சி. ஆனால் 27 கட்சிக்கு ஒரு எம்பி கூட இல்லை.
தமிழ்நாட்டில் அமைத்த கூட்டணியில் அனைத்து கட்சிகளையும் சேர்த்து பார்த்தால் ஒரு எம்பி கூட இல்லை. கூட்டணியில் இருந்த அதிமுக, மிசோராமில் ஆளும் கட்சி என ஒவ்வொன்றாக கழன்று வருகிறது.
இறுதியில், ஈடியும், ஐ.டியும், சிபிஐயும், தேர்தல் கமிஷனும், மாநில கவர்னர்கள் மட்டுமே மிச்சப்படுவார்கள். மாநில அரசுக்கு தீங்கு செய்து வரும் கவர்னர், வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடன் விரட்டபட வேண்டும். இந்தியாவில் குட்டு வாங்கி குவிந்தோரை கணக்கிட்டால் கவர்னர் ரவியை மிஞ்சிட ஆள் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாநில துணை தலைவரும், அரசு கொறடாவுமான கோவி.செழியன், இணை செயலாளர் திண்டுக்கல் ஜெயின், பெரம்பலூர், பெரியசாமி, துணை தலைவர் பழஞ்சூர் செல்வம், நாமக்கல் கே.எஸ்.மூர்த்தி, கோவை முருகவேல், தாமரை பாரதி, வி.பி.மணி, பாண்டி செல்வம், எம்.எஸ்.பாண்டியன், சிவகாசி வனராஜ், ராமர், மதுரை தனசெல்வம், பல்லவி ராஜா, ராமகிருஷ்ணன், தர்மசெல்வன், சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.