சென்னை: நடந்து முடிந்த 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் ஆட்சிக்காலம் சமூகத்தில் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும், வளத்தையும் அளிப்பதாக அமைய விழைகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: பிரதமரின் தொலைநோக்கு பார்வை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மக்கள் அளித்த பேராதரவுக்கும் இந்த வெற்றி ஒரு சான்றாகும். இந்தியாவை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்லும் பிரதமரின் திறமை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை 3 மாநிலங்களின் தேர்தல் வெற்றியும் பிரதிபலிக்கிறது. பாஜகவின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: இந்த தேர்தலின் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதைப் பிரதிபலிக்கிறது. மேலும் இண்டியா கூட்டணியின் பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்துள்ளார்கள். இந்த விதிவிலக்கான செயல்திறனுக்காக, பாஜக ராஜஸ்தான், பாஜக தெலுங்கானா, பாஜக மத்திய பிரதேசம், பாஜக சத்தீஸ்கருக்கு வாழ்த்துக்கள்.
ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கும், அவரின் தலைமை மீதும் மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த மூன்று மாநில தேர்தல் வெற்றி. பாஜக-வின் 3 மாநில தேர்தல் வெற்றிக்கும், பிரதமருக்கும், வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன்: பாஜகவின் வெற்றி இண்டியா கூட்டணிக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. குடும்ப அரசியலும் மோசமான ஊழல் நிர்வாகமும் நீண்ட நாள் நிலைக்க மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். 3-வது முறையும் மோடியின் ஆட்சியே தொடரும்.