சென்னை: மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், இன்று தமிழக வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காற்று மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை அதிகம் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த சில தினங்கள் முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதுதவிர, மாவட்டங்களுக்கு அமைச்சர்களை செல்லும்படி அறிவுறுத்தியுள்ள முதல்வர், திமுகவின் நிர்வாகிகளுக்கும் தங்கள் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களிடம், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஏற்கெனவே, மாவட்டங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதாக தெரிவித்ததிருந்த முதல்வர், ஆட்சியர்களிடம் அவை குறித்து கேட்டறிந்தார். மேலும், மழை தொடங்கும் முன்னரும், தொடங்கிய பின்னரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவும் தற்காலிக தங்குமிடங்கள், பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தரும்படியும் உத்தரவிட்டுள்ளதாக அரசுத தரப்பில் கூறப்படுகிறது.
சிவ்தாஸ் மீனா அறிக்கை: இதனிடையே சென்னை மயிலாப்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது, தீயணைப்புத்துறை இயக்குநர் ஆபாஷ் குமாருடன், பேரிடர் மீட்பு சாதனங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதால், அனைத்து துறைகளும் இணைந்து புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை மற்றும் புயல் பாதிப்புகள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில், அனைத்து உபகரணங்களும் தீயணைப்புத் துறையினரால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதால், பெரிய அளவில் மழையால் பாதிப்புகள் இல்லை. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் தடுக்க, அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. பாதிப்பு எந்தெந்த இடங்களில் என்பதை கண்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு மையமும் செயல்பட்டு வருகிறது. ஏரிகளில் எவ்வளவு நீர் உள்ளது. வெளியேற்றம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புயலின் காரணமாக காற்றும் மழையும் அதிகளவில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது.
தமிழகம் முழுவதும் 364 தீயணைப்பு மையங்களில் 6,743 அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர பயிற்சி பெற்ற 20 பேரைக் கொண்ட நீச்சல் மற்றும் கமாண்டோ வீரர்கள் அடங்கிய குழுவும் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.