சென்னை: தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம், தமிழக பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் இணையம், ஆவின் தொகுப்பு பால் குளிரூட்ட நிலைய சங்கப் பணியாளர்கள் நலச் சங்கம் மற்றும் நாம் தமிழர் மாநில தொழிற்சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், சென்னையில் நேற்று முன்தினம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆலோசனை நடத்தினார்.
இதில், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவை அதிகரிப்பது, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது, பால் உற்பத்தியாளர்களுக்கு பணப் பட்டுவாடா, சேவைகளை மேம்படுத்துவது, அனைத்து சங்கங்களிலும் உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குதல், குறைந்த வட்டியில் கறவை மாட்டுக் கடன், கன்று வளர்ப்புத் திட்டம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் பணிவரன்முறை மற்றும் சம்பள உயர்வு ஆகியவை குறித்து, சங்க நிர்வாகிகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசித்து, விரைவில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.