சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்னம், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து எம்சாண்ட், ஆற்று மணல் போன்றவற்றை சென்னைக்கு எடுத்து வரும்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சுங்கவரியாக செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் தொழில் அழியும் சூழல் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள 26 காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதோடு, சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும்.
ஏற்கெனவே ஜிஎஸ்டி காரணமாக தொழில் நடத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், சாலை வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் குறைக்க உத்தரவிட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானப் பணிகள், தனியார் குடியிருப்பு கட்டுமானம் போன்றவற்றுக்கு முழுமையாக மணல் கிடைப்பதில்லை. தற்போது ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 300 லோடு மணல் தருகிறார்கள். ஆனால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கட்டுமானத் தொழிலுக்கு மட்டும் 3 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள 90 மணல் குவாரிகளை விரைவில் இயக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.