சென்னை: அடுக்குமாடி குடியிருப்பின் பிரிக்கப்படாத பாகம், கட்டிடம் என இரண்டையும் சேர்த்து பதிவு செய்யும் புதிய நடைமுறை தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது.
தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மொத்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் குடியிருப்பாக இருந்தால், பிரிக்கப்படாத பாகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது உள்ளது.
இதற்கிடையில், தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியதுடன், பதிவுக் கட்டணத்தை 2 சதவீதம் குறைத்து உத்தரவிட்டது. தொடர்ந்து, பொது அதிகார ஆவணம் உள்ளிட்டவற்றின் கட்டணத்தையும் உயர்த்தியது.
இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பு விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கட்டுமான சங்கத்தினர் பதிவுக்கட்டணம், முத்திரைத்தீர்வையை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், அடுக்குமாடி குடியிருப்பு பதிவு தொடர்பாக, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள நடைமுறை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், பதிவு நடைமுறையில் மாற்றம் கொண்டுவர, அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அதிகாரிகள், கட்டுமான சங்கத்தினரிடம் கருத்துக்களை கேட்டனர்.
இதைத்தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் புதிய நடைமுறையை சமீபத்தில் அறிவித்தது. அத்துடன், குடியிருப்பு வாங்கும் பொதுமக்கள் வசதிக்காக முத்திரைத்தீர்வையையும் குறைத்தது. அதன் அடிப்படையில், பிரிக்கப்படாத பாக மனை நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஆகிய இரண்டுக்குமான மொத்த மதிப்பினைக் கணக்கிட்டு ரூ.50 லட்சம் வரை மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதிவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தி பதிவு செய்யலாம். ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் மற்றும் ரூ.3 கோடிக்கு மேலான மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு 7 சதவீதம் முத்திரைத்தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் என ஏற்கெனவே உள்ள நடைமுறையில் செலுத்தி பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய நடைமுறை நாளை டிச.1 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த நடைமுறை பிரிக்கப்படாத பாக மனை நிலத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இனி பிரிக்கப்படாத பாக மனை நிலத்தை தனி ஆவணமாகப் பதிவு செய்ய முடியாது. மேலும் டிச.1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த முத்திரைத் தீர்வை சலுகையானது, முதன்முறையாக விற்பனை செய்யப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.